கோசாலை அமைக்க கோரிக்கை


கோசாலை அமைக்க கோரிக்கை
x

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கோசாலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றானது அகோர முகம். அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் கோசாலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

விளைநிலங்கள்

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில்களில் கோசாலை அமைத்து தினந்தோறும் பால் கறந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் காரணமாகவே பல்வேறு கோவில்களில் கோசலைகள் உள்ளன. இந்த கோவிலில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் குத்தகைதாரர் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல்களை கொண்டு கோசாலை அமைத்து அதில் பசு மாடுகளை பராமரிக்கலாம். தற்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பசு மாடுகளை கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

கோசாலை அமைக்க வேண்டும்

கோவிலின் உள்பகுதியில் கோசாலை அமைப்பதற்கான போதுமான இட வசதி உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோசாலை பராமரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கோவிலில் கோசாலை அமைத்து அதன் மூலம் கிடைக்கும் பாலை தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும், அதிகாலையில் கோமாதா பூஜை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story