நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதியில் அமைக்க கோரிக்கை: உசிலம்பட்டி புதிய பஸ் நிலைய கட்டுமானத்துக்கு தடை கோரி வழக்கு-முறையான அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர ஐகோர்ட்டு உத்தரவு


நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதியில் அமைக்க கோரிக்கை: உசிலம்பட்டி புதிய பஸ் நிலைய கட்டுமானத்துக்கு தடை கோரி வழக்கு-முறையான அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர ஐகோர்ட்டு உத்தரவு
x

உசிலம்பட்டி பஸ் நிலையத்தை புறநகர் பகுதியில் அமைக்கக்கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, முறையான அனுமதி பெற்று புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.

மதுரை


உசிலம்பட்டி பஸ் நிலையத்தை புறநகர் பகுதியில் அமைக்கக்கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, முறையான அனுமதி பெற்று புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.

நெருக்கடியில் பஸ்நிலையம்

உசிலம்பட்டி ஏ.ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உசிலம்பட்டி நகர் மையப்பகுதியில் 2 ஏக்கர் பரப்பரளவில் பஸ் நிலையம் கடந்த 1992-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது அங்கு 9 கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது அங்கு 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு உள்ளது. மேலும் அந்த பஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட தரை வாடகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த பஸ் நிலைய பரப்பளவு 1½ ஏக்கர் ஆக சுருங்கிவிட்டது.

30 ஆண்டுக்கு முன்பு அப்போதைய உசிலம்பட்டி மக்கள் தொகையை கணக்கிட்டு இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி 1½ ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் நிலையம் பயணிகளுக்கு சவுகரியமாக இல்லை. இருசக்கர வாகன காப்பகம், பயணிகள் காத்திருக்கும் இடம், என எந்த ஒரு அடிப்படை வசதியும் அங்கு இல்லை. நகரின் மையப்பகுதியில் மதுரை-தேனி ரோட்டில் நெருக்கடியான இடத்தில் பஸ் நிலையம் உள்ளது.

தடை கோரி மனு

இதனால் வெளியூர் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. பயணிகளுக்கு எந்த வகையிலும் வசதியாக இல்லாததால், உசிலம்பட்டி பஸ் நிலையத்தை புறநகர் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.

ஆனால் அதை பரிசீலிக்காமல், இந்த பஸ் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இது மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது. எனவே அங்கு புதிய பஸ் நிலையம் கட்டத்தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உசிலம்பட்டியில் கட்டப்படும் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகளை தொடரலாம். அந்த பணிகள் முடிந்ததும், முறையான அனுமதி பெற்று, பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story