கண்மாய் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைத்து தர கோரிக்கை
அருப்புக்கோட்டை அருகே கண்மாய் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கண்மாய் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்மாய் கரை
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டியில் இருந்து கோபாலபுரம் செல்லும் கரிசல்குளம் கண்மாய் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கண்மாய் கரையும் பலம் இழந்து உள்ளது.
இந்த கண்மாய் கரை வழியாக அமைக்கப்பட்ட சாலை வழியாக தான் பாளையம்பட்டியில் இருந்து கொத்தனார் காலனி, கலைஞர் காலனி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல விவசாய பணிகளுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.
சேதமடைந்த சாலை
தினமும் இந்த சாலை வழியாக நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாளையம்பட்டியில் இருந்து கோபாலபுரம் செல்லும் கரிசல்குளம் கண்மாய் கரை பலம் இழந்தும், சாலை சேதமடைந்தும் காணப்படுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் கண்மாய் கரை வலுவிழந்து இருப்பதால் இ்ந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த வழியாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை, உபகரணங்களை சிரமத்துடன் எடுத்து செல்கின்றனர். எனவே கண்மாய் கரையை பலப்படுத்தி அங்கு தரமான சாலை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.