108 ஆம்புலன்சுகளை இரவு நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்ககோரிக்கை


தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளை இரவு நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கணேஷ்நகர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளை இரவு நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு திருநங்கைகள் நேற்று காலையில் வந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ரோடு இணைப்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில திருநங்கைகள் செய்த தவறுகளால் 4 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் திருநங்கைகளை தொடர்ந்து கைது செய்யும் நிலை உள்ளது. இதனால் திருநங்கைகள் வெளியில் நடமாடினால் கூட கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம். மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களையும் வாழ விடுங்கள். இல்லையென்றால் வாழ்வதற்கான வழியை விடுங்கள். எங்களை மீண்டும் காட்சி பொருளாக மாற்றி விடாதீர்கள் என்று கூறி உள்ளனர்.

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்க தலைவர் பிரபு, செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் 500 கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும், தூத்துக்குடியில் மட்டும் 250 பேரும் உள்ளனர். தூத்துக்குடி நகர மின்சார வாரிய செயற்பொறியாளர் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு உள்ள கேபிள் டி.வி ஒயர்கள் அப்புறப்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளார். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் நலன் கருதியும், இண்டர்நெட் சேவைகளை பயன்படு்தி வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி செயற்பொறியாளரின் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆம்புலன்சு

தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, ஒட்டநத்தம், தூத்துக்குடி கணேஷ்நகர், நாலாட்டின்புதூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகள் இரவு நேரங்களில் இயக்கப்படாமல் உள்ளது. அதனை 24 மணி நேரமும் தடையின்றி இயக்க வேண்டும், ஆம்புலன்சுகளை நிறுத்தி விட்டு ஊழியர்களை பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யக்கூடாது, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், 108 ஆம்புலன்சு சேவையில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்


Next Story