2 டன் ரேஷன் அரிசியை வேனில் கடத்தியவர் கைது
திருப்பூர்:
உடுமலை அருகே வேனில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரேஷன் அரிசி கடத்தல்
திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் குடிமங்கலம் நால்ரோடு சந்திப்பில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் தடுப்பு சம்பந்தமாக வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி 2 டன் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்தவரை விசாரணை செய்ததில் அவர் தாராபுரம் சகுனிபாளையத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரத்தை கைது செய்து வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கேரளாவுக்கு...
தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் பொதுவினியோக திட்ட ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.