650 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது


650 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது
x
திருப்பூர்


கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுபடி, திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ஆட்டோவில் வந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர் சேடர்பாளையத்தை சேர்ந்த செல்வக்குமார் (வயது 39) என்பதும், வாவிபாளையம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்வக்குமாரை போலீசார் கைது செய்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story