மகளிர் கல்லூரி மாணவிகள் வசதிக்காக பஸ் வழித்தடங்களின் நேரம் மாற்றியமைப்பு
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் வசதிக்காக பஸ் வழித்தடங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் வசதிக்காக பஸ் வழித்தடங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மகளிர் கல்லூரி
வாலாஜாவில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வாலாஜா மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு வந்து விட்டு திரும்புகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது வசதிக்கேற்றவாறு பஸ் வழித்தடங்களில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடம் எண் டி3 பஸ் காலை 8.15 மணிக்கு சோளிங்கரில் இருந்து வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இயக்கப்படும்.
13 ஏ என்ற வழித்தட பஸ் காலை 8.35 மணிக்கு சோளிங்கரில் இருந்து ஆற்காட்டிற்கு வாலாஜா வழியாக இயக்கப்படும்.
தடம் எண் 401 புறநகர் பஸ் சோளிங்கரில் இருந்து ஆற்காட்டுக்கு 8.35 மணிக்கு வாலாஜா வழியாக மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு வசதியாக இலவசமாக இயக்கப்படும்.
இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி
தடம் எண் 486 என்ற எண்ணுள்ள புறநகர் பஸ் வேலூரில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு வாலாஜா மகளிர் கல்லூரி வழியாக அரக்கோணத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ் காவேரிப்பாக்கம், ஓச்சேரி. பனப்பாக்கம், நெமிலி வழியாக மாலை 4 மணிக்கு அரக்கோணம் செல்கிறது. இந்த பஸ்சில் மாணவிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தடம் எண் டி7 காலை 9 மணிக்கு பானாவரத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ் தற்போது மாணவிகள் வசதிக்காக 8.50 மணிக்கு வாலாஜா வரை இயக்கப்படுகிறது.
தடம் எண் 161 ஏவேலூரில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு வாலாஜாவிற்கு மகளிர் கல்லூரி வழியாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் காவேரிப்பாக்கம், பாணாவரம், ஆயல், போளிப்பாக்கம், அன்வர்திகான்பேட்டை, மின்னல் வழியாக இயக்கப்படுகிறது. இந்த பஸ்சிலும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியாக பணியாளர் நியமனம்
தடம் எண் டி7ஏ என்ற பஸ் பிற்பகல் 3.50 மணிக்கு வாலாஜா மகளிர் கல்லூரியில் இருந்து பாணாவரம் வரை இயக்கப்படும்.
டி3 பஸ் பிற்பகல் 3.50 மணிக்கு வாலாஜா கல்லூரி சென்று அங்கிருந்து சோளிங்கர் வரை இயக்கப்படும்.
10டி.ஏ. என்ற பஸ் வாலாஜா கல்லூரியில் இருந்து மாலை 4.05 மணிக்கு நடையெடுத்து சிப்காட், திருவலம் வழியாக காட்பாடிக்கு இயக்கப்படும்.
காலை 9.15 முதல் 9.45 மணி வரை வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், சென்னை, காஞ்சீபுரம் செல்லும் அனைத்து புறநகர் பஸ்களிலும், கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு இலவசமாக கல்லூரியில் விடப்படும். அனைத்து புறநகர் பஸ்களிலும் கல்லூரி மாணவிகளை இலவசமாக ஏற்றி இறக்கி செல்லும். மேலும், வாலாஜா பஸ் நிலையத்தில் தனியாக ஒரு பணியாளரை நியமித்து மாணவிகளை ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
123,155,156,157 என்ற வழித்தடத்தில் (ஆற்காடு சென்னை, வேலூர்- காஞ்சீபுரம்) வரும் பஸ்கள் வாலாஜா மகளிர் கல்லூரி மாணவிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.