நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

கடலில் தத்தளிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 51). இவர் தனக்கு சொந்தமான நாட்டு படகில் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (62), எக்ளிண்டன் (61), ஆரோக்கியம் (40) ஆகியோருடன் நேற்று முன்தினம் கீழவைப்பார் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தூரத்தில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் பின்னர் கரைக்கு திரும்பும்போது பலத்த காற்று காரணமாக படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகின் மேற்பகுதியில் தொற்றிக்கொண்டு 4 மீனவர்களும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

4 மீனவர்கள் மீட்பு

இதற்கிடையே 4 பேரும் வெகு நேரம் ஆகியும் கரைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கீழவைப்பார் பகுதியை சேர்ந்த சக மீனவர்கள் படகு மூலம் கடலுக்குள் சென்று தேடினர்.

அப்போது நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை கண்டதும் அங்கு படகை விரைவாக செலுத்தி 4 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலெக்டர்

இதுகுறித்து தூத்துக்குடியில் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், கீழவைப்பார் கிராமத்தில் நிறைய மீனவர்கள் இருக்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரு படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு கவிழ்ந்ததால் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த உடன் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைப்போம் என்றார்.


Next Story