ஆபத்துகளில் சிக்கிய 750 உயிரினங்கள் மீட்பு
ஆபத்துகளில் சிக்கிய 750 உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
ஆபத்துகளில் சிக்கிய 750 உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மீட்பு பணி
தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீ விபத்துகளின் போது சேதத்தினை தடுப்பது, விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர கிணற்றில் விழுந்த ஆடு, மாடுகளை மீட்பது, வீடுகளில் புகுந்த பாம்பினை பிடிப்பது மேலும் ஆபத்துகளில் சிக்கிய உயிரினங்களை மீட்கும் பணியையும் செய்து வருகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை உயிரினங்களை மீட்பது தொடர்பாக 750-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:-
திருவண்ணாமலை தீபமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் மான்கள் உள்ளன. இந்த மான்கள் ஊருக்குள் வரும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுகிறது.
ஆடு, மாடு, மான்கள் மீட்பு
இதேபோன்று மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளும் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுகிறது. அவ்வாறு விழுந்த மான்கள், ஆடு, மாடுகளை மீட்டுள்ளோம்.
நேற்று ஆடையூர் கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் மான் ஒன்று விழுந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை நாங்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
எனவே ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது கவனமுடன் கண்காணிக்க வேண்டும். தனிநபர் கிணறு வைத்திருந்தால் அதை இரும்பு கம்பிகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
மேலும், வீடுகளில் புகுந்த பாம்பினை பிடிக்க உதவ வேண்டும் என்றே பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்தை அணுகுகின்றனர். அதன்படி நாங்களும் அங்கு சென்று விஷப்பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கிறோம்.
நாங்கள் அதிகமாக பாம்புகளை தான் மீட்டுள்ளோம். அந்த பாம்புகள் அனைத்தும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. பாம்பினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுத்துள்ளோம்.
மீட்பு பணிக்காக வரப்பெற்ற அழைப்புகள் மூலம் ஆபத்துகளில் சிக்கிய 750-க்கும் மேற்பட்ட உயிரினங்களை மீட்டுளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---