சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு


சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

சிறுத்தை சிக்கியது

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திசால் பகுதியில் தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்தறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுத்தையின் முதுகு பகுதியில் சுருக்கு கம்பி சிக்கி இருந்தது தெரியவந்தது.

மேலும் வனத்துறையினர் அருகே செல்ல முயன்ற போது, சிறுத்தை உறுமியது. இதனால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின், சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தையை பார்வையிட்டார். இதைதொடர்ந்து சிறுத்தையை உயிருடன் மீட்கவும், சுருக்கு கம்பி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஒருவர் கைது

இந்தநிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், எருமாடு கால்நடை டாக்டர் சரண்யா ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினர் உதவியுடன் துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை மயக்கம் அடைந்தது. இதையடுத்து டாக்டர்கள் ஆய்வு செய்த போது, 3 வயதான பெண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கியது தெரியவந்தது. அதன் பின்னர் சிறுத்தையை வலை மூலம் பிடித்து மீட்டு, கூண்டில் அடைத்தனர். இதைதொடர்ந்து கூண்டை வாகனத்தில் ஏற்றி, முதுமலை கால்நடை ஆஸ்பத்திரிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தோட்டத்தில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி வைத்தது தெரியவந்தது. இதை அறிந்த தோட்ட உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். மேலும் அவரது மருமகனான அனீஸ்ராஜன் (வயது 39) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story