ஏரியில் மீன் பிடிக்க சென்று பலியான தந்தை-மகன் உடல்கள் மீட்பு
ரத்தினகிரி அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது சேற்றில் மூழ்கி பலியான தந்தை, மகன் உடல்கள் மீட்கப்பட்டன.
மீன் பிடிக்க சென்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47), கூலி தொழிலாளி. இவரது மகன் பரத் (13), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆறுமுகம், தனது மகன் பரத்துடன் நந்தியாலம் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது வலையை ஏரியில் வீசி விட்டு சிறிது நேரம் கழித்து மீன் பிடி வலையை எடுக்க பரத் ஏரிக்குள் சென்றான்.
தந்தை-மகன் பலி
அப்போது அங்குள்ள சேற்றில் பரத் சிக்கி கொண்டான். இதனை பார்த்த ஆறுமுகம் மகனை மீட்க அவரும் ஏரியில் இறங்கி சென்றார். அப்போது இருவரும் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆறுமுகம் மற்றும் அவரது மகன் பரத் ஆகியோரை மீட்டபோது இருவரும் சேற்றில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.