ராமநாதபுரத்தில், அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகள் மீட்பு
ராமநாதபுரத்தில் அரிய வகை 5 ஆப்பிரிக்க புல் ஆந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளன.
ராமநாதபுரத்தில் அரிய வகை 5 ஆப்பிரிக்க புல் ஆந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளன.
5 ஆந்தைகள் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை நேரத்தில் உணவு தேவைக்காக வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளை தேடி வருவது வழக்கம். அவ்வாறு வரும் பறவைகள் பருவக்காலம் முடிந்ததும் திரும்பி அதன் இருப்பிடங்களுக்கு சென்று விடும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வரவில்லை. இந்நிலையில் ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் உள்ள பழைய கட்டிட பகுதியில் இரவு நேரங்களில் வித்தியாசமாக பறவை எழுப்பிய குரல் கேட்டது. குறிப்பாக பகல் நேரத்தில் இந்த குரல் அதிகமாக கேட்டுள்ளது. எனவே நேற்று காலை அந்த பகுதிைய சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த கட்டிடத்தின் சுவர் ஓர பகுதியில் ஆந்தைகள் இருப்பதை கண்டனர். அவை வித்தியாசமான தோற்றத்தில் இருந்தன. 5 ஆந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வனத்துறையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அங்கு விரைந்து வந்து ஆந்தைகளை மீட்டு சென்று வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அரிய வகை உயிரினம்
இந்த ஆந்தைகள் ஆப்பிரிக்க புல் வகையை சேர்ந்தவை. அரிய வகை உயிரினமான இந்த ஆந்தைகள் வெளிநாட்டு பறவைகளுடன் சேர்ந்து இங்கு பறந்து வந்து திக்கு தெரியாமல் தவித்திருக்கலாம். இந்த ஆந்தைகள் 10 ஆயிரம் அடி உயரத்திலும் பறக்கும் திறன்கொண்டவை. புல்வெளிகள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் வாழும் உயிரினமாகும். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், கென்யா மலைப்பகுதிகளிலும் இந்த ஆப்பிரிக்க புல் ஆந்தைகள் அதிகம் காணப்படுகின்றன. பகலில் கண் தெரியாது என்பதால் இரவு நேரத்தில் அதிக உயரத்தில் பறந்துதிரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.