26 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சாமி சிலை மீட்பு
காட்டுமன்னார்கோவில் அருகே கடத்தப்பட்ட சாமி சிலை 26 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து போலீசார் மீட்டு வந்து கோவிலில் ஒப்படைத்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்வில் அருகே கோவீராணநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெண்கலத்தால் ஆன, சுமார் 3 அடி உயர விநாயகர் உற்சவர் சிலை உள்ளது. இந்த சிலையானது, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டார்மங்கலத்தை சேர்ந்த பத்மாவதி கனக சபை என்பவரால் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அந்த சிலையை யாரோ கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கோவிலில் ஒப்படைப்பு
தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சென்னையில் ஒருவரது வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் வீராணநல்லூர் அரசு பாண்டியன், நாட்டார்மங்கலம் சுதா மணிரத்தினம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சிலை கடத்தல் தடுப்பு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் போலீசார் கோவில் வசம் ஒப்படைத்தனர்.
இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உற்சவர் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிலை கடத்தல் மன்னன்
இதுகுறித்து, கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ் குமார் கூறுகையில், கடந்த 2006-ம் ஆண்டு இங்கிருந்து கடத்தப்பட்ட சிலை, சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த ஷோபா துரைராஜன் என்பவர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை சமீபத்தில் இறந்து போன சிலை கடத்தல் மன்னன் தீன தயாளனிடம் இருந்து, வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 ஆயிரம் கொடுது்து வாங்கி உள்ளனர். இந்த சிலை உள்பட 13 சிலைகள் கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்டது. அப்போது சிலையை பார்க்கையில் சிலையின் பின்புறம் நாட்டார்மங்கலம் பத்மாவதி கனகசபை, பெயரும் இருந்தது. அதன் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கோவிலில் கொடுக்கப்பட்டுள்ளது.
36 பேர் கைது
எங்களது தலைமையில் இதுவரை 47 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது 65 சிலைகள் வெளிநாட்டில் உள்ளது. அவற்றை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 7 வழக்குகளில் 36 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியின் போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.