நீலகிரியில் மீட்பு குழுவினர் தயார்
நீலகிரியில் மழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரியில் மழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் கலந்துகொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ெஹல்மெட் வழங்கி பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் 218 சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. அதில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது, மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என்றார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதன் பின்னா் கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
குழுவினர் தயார்
நடப்பாண்டில் வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் ஆகும். 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த மீட்பு குழுவினர் மழையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 30 பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, டேன்டீ பொது மேலாளர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.