கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு; முதல்-அமைச்சர் தனித்தீர்மானம்


கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு; முதல்-அமைச்சர் தனித்தீர்மானம்
x

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சென்னை,

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டுவர விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது.

எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பவுத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறி விட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத்தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு.

திராவிட மாடல்

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது.

சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.

சலுகைகள்

அந்த வகையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதி, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்.

இதே பேரவையில், மத்திய அரசிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்படும் என்று 6-1-2011 அன்று கவர்னர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உதவித்தொகை

இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகை திட்டங்களும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும், முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956-ம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990-ம் ஆண்டு பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

மாநிலங்களின் கருத்து

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும், மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும், மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும்; தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டுமென கேட்டு அமைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கட்சிகள் வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித்தீர்மானத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சு.ரவி (அ.தி.மு.க.), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), இனிக்கோ இருதயராஜ் (தி.மு.க.) ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பா.ஜ.க. வெளிநடப்பு

இந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக அவையில் பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

தீர்மானத்தை தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் தீர்மானத்தில் பேசி வெளிநடப்பு செய்திருக்கிறார். இந்த தீர்மானத்தை ஏனோ தானோ என்று கொண்டுவரவில்லை. உரிய சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னரே இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.


Next Story