சங்கமேஸ்வரர் கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் 38 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் ஜப்தி நடவடிக்கை; உடனே ரூ.15 லட்சம் வாடகை வசூல் ஆனது


சங்கமேஸ்வரர் கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள்  38 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் ஜப்தி நடவடிக்கை;  உடனே ரூ.15 லட்சம் வாடகை வசூல் ஆனது
x

சங்கமேஸ்வரர் கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் 38 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் உடனே ரூ.15 லட்சம் வாடகை வசூல் ஆனது.

ஈரோடு

பவானி

சங்கமேஸ்வரர் கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் 38 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் உடனே ரூ.15 லட்சம் வாடகை வசூல் ஆனது.

கோவில் இடம்

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 18 குடும்பத்தினர் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள். மேலும் சிலர் வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 38 ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கோவிலுக்கு வாடகை செலுத்தக்கோரி கோவில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின்னரும் வாடகை செலுத்தப்படவில்லை என்பதால் குடியிருப்பவர்களை காலிசெய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையாளர் அன்னக்கொடி தலைமையில், சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சுவாமிநாதன், வெங்கம்பூர் கோவில் இணை ஆணையாளர் சிவராம சூரியன், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஜப்தி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

தற்காலிக நிறுத்தம்

ஜப்தி நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக கோவில் வீட்டில் குடியிருப்பவர்கள் உடனே அவரவர் செலுத்த வேண்டிய வாடகையை கோவில் நிர்வாகத்துக்கு செலுத்தினார்கள். ஒரேநாளில் ரூ.15 லட்சத்துக்கும் மேல் வாடகை வசூல் ஆனது.

இதுபற்றி கோவில் உதவி ஆணையாளர் அன்னக்கொடி கூறுகையில், '80 சதவீத வாடகை பாக்கி வசூல் ஆனதால் தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டப்பட்டுள்ள வீடுகளை சிலர் வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருவது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் கடைகளின் பாக்கிகளும் வசூல் செய்யப்படும்' என்றார்.


Next Story