கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x

கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தொிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்

ஈரோடு

கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அறச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்க்காலில் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது. வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மண் வாய்க்கால் மட்டுமே அமைக்க வேண்டும். நீர் மேலாண்மை செய்ய நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கொடுமுடி கைகாட்டி பிரிவில் அமைந்துள்ள கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகளை கையில் ஏந்தியபடி...

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், 'வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் முழுவதுமாக குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கசிவுநீர் வாய்க்காலை விட்டு வெளியே செல்ல முடியாது. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்,' என கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ேகாரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story