ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு; 5 பேர் தீக்குளிக்க முயற்சி


ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு; 5 பேர் தீக்குளிக்க முயற்சி
x

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

நீர் நிலை ஆக்கிரமிப்புகள்

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் 4-வது கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தாசில்தார் தனபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது கடலூர் சாலையில் கட்டப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதனால் விருத்தாசலம்- கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். இந்த நிலையில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் இந்திரா நகர் பகுதியில் மக்களை சந்தித்து வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் விரைவில் இடித்து அகற்றப்படவுள்ளது என தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென விருத்தாசலம்-கடலூர் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய், பெட்ரோல் கேனை அவர்களில் 5 பேர் எடுத்து வந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது ஒரு பெண் போலீசாரின் கண்ணீல் பெட்ரோல் பட்டதால் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே பொதுமக்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் கேனை பிடிங்கினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் எங்களது வீடு மற்றும் கடைகளை இடிக்கக்கூடாது. விட்டை இடித்தால் நாங்கள் எங்கு செல்வோம்.

மாற்று இடம்

எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரி கதறி அழுதனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. போராட்டத்தின் போது ஒரு பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story