பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு: பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு


பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு:  பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்  திண்டிவனத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்


திண்டிவனம்,


திண்டிவனம் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.268 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் திண்டிவனம் நகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகன், நகராட்சி தலைவர் நிர்மலா மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

போராட்டம்

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் அங்கு பணிகளை தொடங்கிடும் வகையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் நாகேஸ்வரி, உதவி நிர்வாக பொறியாளர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து, பொக்லைன் எந்திரம் மூலம் பணியை தொடங்கினார்கள். இதையறிந்த அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து வந்து, பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவல் அறிந்த நகராட்சி தலைவர் நிர்மலா, கவுன்சிலர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பொதுமக்கள் தரப்பில், இந்த பகுதியில் கழிவுநீர் தொட்டி வைக்க தடை விதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எனவே இங்கு பணி செய்ய கூடாது என்று தெரிவித்தனர்.

ஆனால், அதிகாரிகள் தரப்பில் கோர்ட்டு தடை உத்தரவு எதவும் இதுவரையில் பிறப்பிக்கவில்லை. எனவே பணிகளை நிறுத்த இயலாது என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமாதான கூட்டம்

இந்நிலையில் அங்கு வந்த, திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூணன், பொதுமக்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமாதான கூட்டம் நடத்தி உரிய தீர்வு கண்ட பின்னர் பணிகளை செய்யுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையேற்ற அதிகாரிகள், சமாதான கூட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களை கேட்டு பணிகளை மேற்கொள்வதாக கூறி, பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story