பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 381 மனுக்களை கலெக்டர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 10 பேருக்கு காதொலி கருவிகள், 10 பேருக்கு தையல் எந்திரம் என 27 பேருக்கு ரூ.8½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெற்று மனு
அப்போது கலெக்டரிடம் மனுகொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் சுரேஷ்குமார் என்பவர் கலெக்டரிம் எதுவுமே ஏழுதாமல் இருந்த வெற்று மனுவை வழங்கினார். இதனை பார்த்த கலெக்டர் மனுவை வாங்க மறுத்தார். அப்போது பல மாதங்களாக மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் மனுவில் ஏதும் எழுதாமல் வழங்கியதாக சுரேஷ்குமார் கூச்சல் போட்டார். உடனே அவரை அங்கிருந்து வெளியேற்ற போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மாத இறுதிக்குள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களில் சுமார் 1,655 மனுக்கள் மட்டுமே தீர்க்கப்படாமல் உள்ளது. அதிலும் ஒரு மாதத்தில் 976 மனுக்களும், 2 மாதத்திற்குள் 533 மனுக்களும், 3 மாதத்திற்குள் 146 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இந்த மனுக்கள் அனைத்தின் மீதும் இந்த மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும். ஒருசிலர் நீண்ட நாட்களாக மனு நிலுவையில் இருப்பது போல் கூறுவதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வு காண்பதில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 268 ஹெக்ேடர் பரப்பளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. கோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட்டு வருகிறது. இதில் 200 ஹெக்டேர் மீட்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் மீட்கப்படும். சிலர் வீடு கேட்டு மனு அளிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக வழங்க முடியாதற்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் வீடு இல்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.