ஆதார் மைய ஊழியர்கள் திடீர் போராட்டம்


ஆதார் மைய ஊழியர்கள் திடீர் போராட்டம்
x

குமரி மாவட்டத்தில் ஆதார் மைய ஊழியர்கள் 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஆதார் மைய ஊழியர்கள் 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொதுமக்கள் ஏமாற்றம்

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் என 6 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் செயல்படும் ஆதார் மையங்களில் 9 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை தனியார் ஒப்பந்த நிறுவனம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சம்பளம் வழங்கக்கோரி நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஒப்பந்த ஊழியர்களும் ஆதார் மையத்தை திறக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆதார் மையத்துக்கு வந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆதார் பதிவு செய்ய முடியாமலும், திருத்தம் செய்ய முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

புதிய ஒப்பந்தம்

இதுபற்றிய தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனாலும் அவர்கள் ஆதார் மையத்தை மாலை வரை திறக்கவில்லை. தாசில்தார் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அவர் சென்னையில் உள்ள அதிகாரிகளுடன் பேசியபோது ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் நிறைவு பெற்று புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

அகஸ்தீஸ்வரம் தாலுகா ஆதார் மைய ஊழியர்கள் போராட்டம் நடத்தியதைப்போல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா அலுவலக ஆதார் மைய ஊழியர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சென்ற பொதுமக்களும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.


Next Story