வளர்ப்பு இறால்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்


வளர்ப்பு இறால்களுக்கு ஆதார விலையை  நிர்ணயம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2022 6:30 PM GMT (Updated: 7 Jun 2022 6:30 PM GMT)

வளர்ப்பு இறால்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதன் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி

இறால் வளர்ப்போர் சங்க கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், மாவட்ட இறால் வளர்ப்பு விவசாய சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் நாராயணசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

வளர்ப்பு இறால்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்த விலைக்கு வளர்ப்பு இறால்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மானிய விலையில் மின்சாரம்

மீன்வளத்துறையில் விண்ணப்பம் செய்த இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு உரிமங்களை உடனுக்குடன் புதுப்பித்து தரவேண்டும். வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் இறால் வளர்க்கும் விவசாயிகளுக்கு தடையின்றி உப்பு நீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை ஆந்திர அரசு வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும்.மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், அரவிந்தன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story