மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
21 வகையானவர்கள்
கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.
2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.
அரசு திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.
அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-
உள்ளாட்சியில் 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த முதுகலை பட்டதாரி சாமுண்டீஸ்வரி:- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் சாய்வு தளம் அமைத்து கொடுத்தல், டவுன் பஸ்களில் கட்டணம் இல்லா பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை 6 சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டும். ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் சாய்வுதள வசதியில்லை. அதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் சாய்வு தளம் அமைக்க வேண்டும். இதனை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் அவற்றுடன் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் நிறைவேறினால்தான் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.
பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்த கங்காதரன்:- கடந்த 20 வருடங்களாக அரசு வழங்கும் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற்று வந்தேன். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூலி வேலை செய்து கண் பார்வை குறைந்த தந்தை, கர்ப்பிணியாக உள்ள மனைவி மற்றும் 2 மகன்களை காப்பாற்றி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் எனக்கு இலவசமாக 4 ஆடுகள் வழங்கியதில் 2 ஆடுகள் இறந்து விட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. விவசாய நிலங்களையொட்டி ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருவதால் அடிக்கடி பாம்புகள் உள்ளே நுழைந்து விடுகிறது. இதுவரை முன்னுரிமை அடிப்படையில் தொகுப்பு வீடு கூட ஒதுக்கீடு செய்ய வில்லை. அரசு தரப்பில் தொகுப்பு வீடு கட்டி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
2016 உரிமை சட்டத்தை அமல் படுத்த வேண்டும்
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த காண்டீபன்:- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகளில் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் மட்டும் கிடைக்கிறது. மற்ற எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை, பஸ் பாஸ், ரெயில் பாஸ், மருத்துவ வசதி, மூன்று சக்கர சைக்கிள், ஸ்கூட்டர், வேலைவாய்ப்பில் முன்னுரிமை என எதுவும் வழங்கப்படவில்லை. பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் மனு அளித்துள்ளேன். அரசு அனைத்து திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடிவதில்லை. எனவே உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்கள், சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது தமிழக முதல்-அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர தனி வழி ஏற்படுத்தி உள்ளார். இதே போன்று கோவில்கள் மற்றும் அரசு பஸ்களிலும் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆரணியை சேர்ந்த ரமேஷ்பாபு:- விலைவாசி உயர்விற்கு ஏற்ப மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அருகில் உள்ள புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஊனமுற்றவர்களுக்கு ரூ.3000, கடும் பாதிப்பு உள்ளன ஊனமுற்றவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். மேலும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் சாய்தள வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 உரிமை சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தினால் அனைத்து அரசு திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும். எனவே அந்த சட்டத்தை அரசு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் அரசுத் துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் கட்டாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேணடும். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. போடப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.
ஜாமீன் கேட்கக்கூடாது
திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பி.முத்துகிருஷ்ணன்:- எனக்கு 5 வயதில் போலியோ நோய் தாக்கி ஒரு கால் செயல் இழந்து போனது. வறுமையின் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் கற்றுக் கொண்டு தற்போது தையல் கடையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வருகிறது. அரசு வழங்கிய இலவச மொபட் வாகனத்தையும் பெற்றிருக்கிறேன். வறுமையில் உள்ள எங்களுக்கு சொந்த வீடு இல்லை. 50 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். நான் உழைத்தால் தான் சாப்பாடு. திருமணமாகாத நான் இன்னும் கொஞ்ச காலம் தான் உழைக்க முடியும். வயதான காலத்தில் ஆதரவற்ற நிலையில் தள்ளப்படும் எங்களை போன்றவர்களுக்கு கூடுதலாக மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும். வீடு இல்லாமல் வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை அல்லது அரசு வீடு கட்டித் தர முன்வர வேண்டும். சொந்தமாக தையல் கடை வைப்பதற்கு அரசுக்கு விண்ணப்பித்தபோது கடன் பெற ஜாமீன் கேட்டனர். இதனால் எங்களால் சொந்தமாக தொழில் தொடங்க முடியவில்லை. எனவே எங்களை போன்றவர்களுக்கு தொழில் தொடங்கவும் அரசு உதவி செய்ய வேண்டும்.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் கடன் போன்றவை பெறுவதற்கு அரசு சார்பில் வழிகாட்டி உதவி மையங்களையோ அல்லது களப்பணியாளர்களையோ நியமிக்க வேண்டும்.
கலவையை அடுத்த சஞ்சீவிராயன்பேட்டை சங்கர்:-
மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் அரசு மூலம் நிரந்தர வாழ்வாதாரத்தை எதிர்பார்க்கிறோம். மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கி மூலமாக கடன் பெற எங்களிடத்தில் ஜாமீன் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிக்கு எந்தவித ஜாமீனுமின்றி வங்கி கடன் கொடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அரசு வேலை பெற அலுவலகத்திற்கு செல்லும் போது எங்களை அரசு ஊழியர்கள் பல இடத்திற்கு வரவைத்து அலை கழிக்கிறார்கள். படிப்புக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்கி எங்கள் வாழ்க்கையை உயர்த்த வேண்டும். நான் 10 வருடமாக ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றேன். எனக்கு அப்பா, அம்மா, மனைவி, குழந்தை உள்ளனர். என்னை நிரந்தர பணியாளராக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வளவுபேர் பயன்பெறுகிறார்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடையாள அட்டை பெற்ற மொத்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 18200. ஆண்கள் - 10920, பெண்கள் - 7280. தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 6498 பேர். ஆண்கள் - 3257, பெண்கள் - 3241.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,4024 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 5,727 பேருக்கு தேசிய மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 7,047 பேருக்கு இன்னும் அடையாள அட்டை வரவேண்டி உள்ளது. 6 ஒன்றியங்களில் நடந்த சிறப்பு முகாமில் 1,241 மாற்றுதிறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 1,937 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களும், முதுகுத் தண்டுவடம், தசை சிதைவினால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் மட்டும் 878 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஆர்.பாலாஜி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 76,642 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.) 29,884 வழங்கப்பட்டு உள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 9,456 பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தில் 22,322 பேருக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 1,278 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தினால் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்காக பெறப்பட்ட உதவி உபகரணங்கள் 2,052 பேருக்கு ரூ.2 கோடியே 7 லட்சத்து 73 ஆயிரத்து 147 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 24 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 15 வகையான இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 720 நபர்கள் பயன்பெற்று வருவதாக திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 535 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் அளிக்கும் சான்றிதழின்படி தனித்துவம் வாய்ந்த தேசிய ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 25,000 பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மன வளர்ச்சி குன்றிய, மூளை வளர்ச்சி இல்லாத, தொழுநோய் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2,000 மற்றும் அவர்களை பராமரிக்கும் நபர்ளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. அதைத்தவிர வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 9,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.