மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்


மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் புத்துயிர் பெறுகிறது.

கிருஷ்ணகிரி

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.

இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி கொடுத்தது.

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள். அரசு வாகனங்கள் வருவதை கண்டாலே போதும் தங்களை பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்து போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர்.

அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திைரப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களை குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்து வரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.

மறுவாழ்வு மையம்

கிருஷ்ணகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன்-

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. ஆந்திர, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலரும் அந்த பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, ஆதரவற்றவர்களை வாகனங்களில் ஏற்றி வந்து கிருஷ்ணகிரி பகுதியில் விட்டு செல்கிறார்கள். அவ்வாறு விட்டு சென்ற பலரை நானும், எனது குழுவினரும் மீட்டு அரசு காப்பகங்களில் சேர்த்துள்ளோம்.

இந்த மாவட்டத்தில் அதிக அளவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளனர். மேலும் வருவாய் ஈட்ட இயலாமல் மக்களிடம் பலரும் பிச்சை வாங்குகிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். எனவே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அருகிலேயே மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.

பாராட்டுக்குரியது

ஓசூரை சேர்ந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ராதா:-

ஓசூர் மாநகராட்சி உதவியுடன், ஓசூர் அண்ணாமலை நகர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறேன். இதன் மூலம் பல பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சுற்றித்திரியும் பெண்கள், முதியோர்களை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்து அவர்களுக்கு மருத்துவ உதவி, பொருளாதார உதவி மற்றும் அரசு மூலம் உரிய உதவிகள் பெற்று தரப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு தவறுதலாக வெளியேறி பல ஆண்டுகளாக சுற்றித்திரியும் நபர்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் உறவினர்களை கண்டறிந்து, தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் உள்ளவர்களுடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளேன். பிச்சை எடுப்பவர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கவும், உதவிடவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டக்கூடியதாகும்.

வரவேற்பு

போச்சம்பள்ளியை சேர்ந்த தொழில் அதிபர் ரங்கசாமி குமார்:-

நான் கடந்த 10 ஆண்டுகளாக போச்சம்பள்ளி, மத்தூர், திருப்பத்தூர் பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, திருப்பத்தூர் உதவுங்கள் அமைப்பு மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கிறேன். மேலும் அந்த அமைப்பில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, உடை ஆகியவை வழங்கி அவர்கள் எந்த எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீஸ் துறை மூலம் விசாரித்து அவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறோம்.

சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து அவர்களை குடும்பத்துடன் சேர்க்கவும், மறுவாழ்வு வழங்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்க கூடியது.

தெரியாது

கிருஷ்ணகிரி பகுதியில் சுற்றி திரியும் பிச்சைக்காரர் ரவி:-

நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவன். இந்த பகுதியில் மக்கள் எனக்கு உணவு, டீ தருவார்கள். சிலர் காசு தருவார்கள். சில நாள் சாப்பாடு கிடைக்காது. என்னை போல பலர் உள்ளனர். எங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வேறு வழி இல்லை. அதனால் இவ்வாறு இருக்கிறோம். அரசின் உதவிகளை எல்லாம் எப்படி பெறுவது என்றெல்லாம் எனக்கு தெரியாது. அன்றாட பிழைப்பு எங்களுக்கு இப்படி தான் செல்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story