ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, பெண் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை


தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு அழைத்து சென்று பெண்ணை தூக்கிய வழக்கில் ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, பெண் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தூத்துக்குடி

பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கிய வழக்கில் ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, பெண் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.

பெண் மீது தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி பாப்பா (வயது 49). இவரது கணவர் இறந்து விட்டார். கடந்த 2.11.2007 அன்று அந்த பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல்காந்த், சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் காசிலிங்கபுரத்துக்கு ஜீப்பில் சென்று உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அங்குள்ள பாப்பாவின் வீட்டுக்குள் நுழைந்த போலீசார், வீட்டை சேதப்படுத்தி பாப்பாவையும் தாக்கி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கும் பாப்பாவை தாக்கி உள்ளனர். இதில் அவரது 2 கைகளிலும் விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பிறகு ஊர்மக்கள் திரண்டு சென்று பாப்பாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் 22 நாட்கள் சிகிச்சை பெற்று உள்ளார்.

கோர்ட்டில் வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த அப்போதைய மாவட்ட கலெக்டர், விசாரணை நடத்த உதவி கலெக்டருக்கு உத்தரவிட்டார். உதவி கலெக்டர் நடத்திய விசாரணையில், பாப்பாவை போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் பாப்பா நெல்லை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

பதவி உயர்வு

இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் விமல்காந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்திமதி, பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

3 ஆண்டு சிறை

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு தொடங்கப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விமல்காந்த், இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பாப்பாவுக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் பூங்குமார், பாப்பா தரப்பில் வக்கீல் அதிசயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.


Next Story