ஓய்வு பெற்ற வங்கி உதவியாளருக்கு 20 ஆண்டு ெஜயில்
சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற வங்கி உதவியாளருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற வங்கி உதவியாளருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாலியல் வன்புணர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாரதியார் தெரு பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி 11 வயதுடைய ஒரு சிறுமி கடைக்கு சென்றாள். அப்போது அந்த சிறுமியை மூர்த்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடி சென்றனர். அப்போது அழுதபடி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட மூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மூர்த்தியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.