ஓய்வுபெற்ற ஆவின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி ஆவின் முன்பு, ஆவின் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன நுழைவாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆவின் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் நலச்சங்க துணை தலைவர் உதயணன், செயலாளர் டேவிட் மரியநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அறிவழகன், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பேசுகையில், கிருஷ்ணகிரி ஆவினில் கடந்த, 2005 முதல், 2017 வரை பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டிய, ஈட்டா விடுப்பு தொகை வழங்கப்படாமல் உள்ளது. கடந்த, 2017-க்கு பிறகு சிலருக்கு விடுப்புத்தொகை வழங்கப்பட்டாலும், முரண்பாடாக பணி மூப்பு அடிப்படை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை நிலுவைத்தொகை
கிருஷ்ணகிரி ஆவினில் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. அதற்கான கமிஷனை அதிகாரிகள் பெறுகின்றனர். ஓய்வூதியர்கள் தங்களுக்கான விடுப்பு நிலுவைத்தொகையை கேட்டால் வழங்குவதில்லை. இது குறித்து விசாரித்தும், விடுமுறை நிலுவைத்தொகையை பணி மூப்பு அடிப்படையில் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.