மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் சாவு
மந்தாரக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் இறந்தார்.
நெய்வேலி,
மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி என்.சி.வி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). இவர் என்.எல்.சி. தீயணைப்பு துறையில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
நேற்று மாலை ரெங்கராஜன் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் ரோமாபுரி பகுதியை சேர்ந்த அரசன் மகன் எடிசன் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். எடிசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரெங்கராஜன் தம்பி இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.