கார் மரத்தில் மோதி விபத்து: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்-மகன் பலி பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்
நாகர்கோவில் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மகனுடன் பலியானார். மேலும் பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திங்கள்சந்தை:
நாகர்கோவில் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மகனுடன் பலியானார். மேலும் பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
குமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ரசலய்யன் (வயது 66). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மகன் அருண் சாம் (30). இவர் திருவனந்தபுரத்தில் அரசு ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அக்ஷயா (27). இவர் மதுரையில் உள்ள மதுரை மண்டல ரெயில்வேயில் இளநிலை உதவியாளராக நியமனம் செய்யப்பட்டார். இதற்காக அவர் சென்னையில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சிக்கு சென்று 4 மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில் அருண்சாம் சென்னைக்கு காரில் சென்று ஈஸ்டர் பண்டிகைக்கு மனைவியை அழைத்து வந்தார். அந்த காரில் ரசலய்யன், அக்ஷயா மற்றும் அவருடைய தாயார் சரோஜா (55), தம்பி அகில் ராஜ் (25), அக்ஷயாவின் குழந்தை அட்ரியன் (1) ஆகிய 6 பேர் இருந்தனர்.
தந்தை-மகன் பலி
அந்த காரை அருண்சாமும், அகில்ராஜூம் மாற்றி, மாற்றி ஓட்டி வந்தனர். நாகர்கோவில் வந்த பிறகு அருண்சாம் காரை ஓட்டினார். நள்ளிரவில் வில்லுக்குறி அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அருண்சாம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் ரோட்டோரத்தில் நின்ற பன்றிவாகைமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் அருண் சாம் மற்றும் ரசலய்யன் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்தில் காரின் பின்சீட்டில் இருந்த அக்ஷயா, சரோஜா, அகில்ராஜ், குழந்தை அட்ரியன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 4 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
---