ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்; 658 பேர் கைது


ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்; 658 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பஞ்சப்படி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 658 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 86 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டாக பஞ்சப்படி வழங்கவில்லை. பஞ்சப்படி வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நீதிமன்றமும் பஞ்சப்படி வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் பஞ்சப்படி வழங்கப்படவில்லை.இதை கண்டித்தும், பஞ்சப்படியை உடனே வழங்கக்கோரியும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை விழுப்புரம் தலைமை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேரணி

அப்போது அவர்கள், தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்த போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி பகலவன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள், பணிமனையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக புறப்பட்டனர்.

658 பேர் கைது

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், திருச்சி-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார், ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் இது தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து தொழிலாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். மொத்தம் 658 பேரை போலீசார் கைது செய்து, 3 திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story