கண்மாயில் புதைத்த தந்தங்கள் மீட்பு; 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கண்மாயில் புதைத்து வைத்திருந்த ரூ,3 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக 3 பேரை கைது ெசய்தனர்.
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கண்மாயில் புதைத்து வைத்திருந்த ரூ,3 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக 3 பேரை கைது ெசய்தனர்.
யானை தந்தங்கள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் யானை தந்தங்களை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதை தொடர்ந்து சிவகங்கை ரேஞ்சர் பார்த்திபன் தலைமையில் வனத்துறையினர் காளையார்கோவில் அருகே உள்ள வெங்கடேச மணியங்குடி என்ற கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு கண்மாய் பகுதியில் சோதனை செய்தனர். அங்கு ஒரு இடத்தில் சோதனையிட்ட போது அங்கு 2 யானை தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என தெரிவித்தனர்.
3 பேர் கைது
இ்ந்த தந்தங்களை கடத்தி வந்து கண்மாய் பகுதியில் பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் திருப்பூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30), விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சியை சேர்ந்த கணேஷ் பாண்டியன் (42), மானாமதுரையை அடுத்த கீழ பசலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (38), ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர் (35) ஆகியோர் யானை தந்தங்களை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து இப்பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், கணேஷ் பாண்டியன், சங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபாகரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.