சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பூட்டி வைப்பு
கட்டிடம் சேதம் அடைந்ததால் சீர்காழி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சீர்காழி;
சீர்காழி இந்திரா நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் இருந்தது. இந்த அலுவலகத்துக்கு சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த 24 வார்டு பொதுமக்கள், தாடாளன் கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், கடவாசல், எடமணல், திருமுல்லைவாசல், விளந்திட சமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கிறார்கள்.இந்நிலையில் மேற்கண்ட அலுவலக கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் தற்பொழுது வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பூட்டப்பட்டு உள்ளது.தற்பொழுது வருவாய் அலுவலகம் எங்கு செயல்படுகிறது என்ற விவரம் இல்லாததால் இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது தற்பொழுது செயல்படும் வருவாய் ஆய்வாளர் அலுவலக இடம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.