வெளிநடப்பு செய்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வெளிநடப்பு செய்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன், மாவட்ட பொருளாளர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேரம் தங்களது அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.