உரிமம் புதுப்பிக்கும் முறையை ஓராண்டாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும் - விக்கிரமராஜா


உரிமம் புதுப்பிக்கும் முறையை ஓராண்டாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும் - விக்கிரமராஜா
x

உரிமம் புதுப்பிக்கும் முறையை ஓராண்டாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை தெற்கு மாவட்டம் சார்பில் வணிகர்கள் எழுச்சி மாநாடு நடந்தது. நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கார்த்தீசன், மாநில இணை செயலாளர்கள் தங்கையா கணேசன், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராஜன் மாநாட்டு தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார்.

மாநாட்டில், வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வணிகவரித்துறையின் டெஸ்ட் பர்சேஸ் மற்றும் செஸ் வரி விதிப்பை நீக்க வேண்டும். வள்ளியூர் பஸ்நிலையம் மற்றும் சந்தை கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் மணி, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜா, தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா, தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார் நன்றி கூறினார். கூட்ட முடிவில், மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5-ந் தேதி மாநில அளவில் நடக்கும் மாநாட்டிற்கு முன்னோட்டமாக நெல்லையில் நடக்கும் இந்த மாநாடு அமைந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை கடுமையாக தொந்தரவு செய்து வருகிறார்கள். குறிப்பாக உரிமம் முறை என்பது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் அபராதம் என்ற பெயரில் வசூலிப்பதை கட்டாயமாக திரும்ப பெற வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்கும் முறையை மாற்றி ஓர் ஆண்டாக இருப்பதையும் திரும்ப பெற வேண்டும்.

நகைக்கடைகளில் வெளியூரில் இருந்து யாராவது ஒரு திருடர்கள் திருடி விட்டு இந்தக்கடை தான் என்று கையை காட்டினால் அதை முறையாக விசாரிக்காமல், போலீசார் அத்துமீறலோடு நடந்து கொள்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற அதிகாரிகள் வியாபாரிகளை கனிவோடு பார்க்கவில்லை என்றால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story