முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவண்ணாமலைக்கு வருகிற 22-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதாக இருந்தது.

அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதல்- அமைச்சர் 21-ந் தேதி வேலூர், திருப்பத்தூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை செல்கிறார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார்.

அன்று காலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக இந்த நிகழ்ச்சி ஒருவாரம் தள்ளி போகலாம். கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு முதல்- அமைச்சர் வருகை தர உள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

எனவே முதல்- அமைச்சர் திருவண்ணாமலைக்கு வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சருக்கான அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அந்த இடத்தில் 20 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் பந்தல் அமைக்கப்பட உள்ளது.

தற்போது 36 அரசு துறைகளின் மூலம் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளில் இருந்து 20 ஆயிரம் பயனாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து அவர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளன்று அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பயனாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். பயனாளிகளை நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அழைத்து வந்து அமர வைப்பதற்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை பந்தலின் முன் பகுதியில் அமர வைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை வேண்டும். ஜெனரேட்டர் வசதியும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

புதுமையான கண்காட்சி

முதல்-அமைச்சர் வருகை தரும் நாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூர் பீமன் அருவி, சாத்தனூர் அணை போன்ற முக்கிய பகுதிகளின் மாடல்கள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் புதுமையான கண்காட்சி அமைக்க வேண்டும்.

முகாம்கள் நடத்த வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் 85 சதவீதம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும். இங்கு சொல்லும் அளவிற்கு தொழிற்சாலைகள் கிடையாது. பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. எனவே வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து மாவட்டம் முழுவதும் வேளாண்மை துறை அலுவலர்கள் முகாம்கள் நடத்த வேண்டும்.

எஸ்.டி. சான்றிதழ்

இந்த மாவட்டத்தில் எஸ்.டி. சான்றிதழ் தொடர்பாகவும், சுடுகாடு பிரச்சினை தொடர்பாகவும் அதிகளவு மனுக்கள் வருகின்றன. விழாவின் போது அதிகளவில் எஸ்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுடுகாடு பாதை பிரச்சினையே இல்லாத அளவில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழாவை முன்னிட்டு வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள், திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டவுள்ள பணிகளின் விவரத்தினை முறையாக தொகுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பசுமை விருதுக்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை சுற்றுச்சூழல் துறையில் 2 பேருக்கும், ஊரக வளர்ச்சி துறையில் 64 பேருக்கும் வழங்கினார்.

மேலும் அமைச்சர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மகளிர் திட்ட அலுவலர் சையத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story