அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்


அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.

அரசு முதன்மைச் செயலரும், வணிகவரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி பயனாளிகளுக்கு சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழக அரசின் முக்கிய திட்டப்பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கனவே செயல்படுத்தி வரும் அரசின் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

வருகிற அக்டோபர் மாத தொடக்கத்திலேயே வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்களின் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து வேளாண்மை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணி விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகத்தின் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் குமராவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் ஓட்டுனர் உரிமம் வழங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சையத்சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், தனலட்சுமி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

போளூர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2021-22-ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.403.70 லட்சம் மதீப்பீட்டில் புதிய மார்க்கெட் வணிக வளாகத்தில் 80 கடைகள் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டப்பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் திடீரென்று ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் முருகேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணைத்தலைவர் எவரெஸ்ட் சாந்தி நடராஜன், செயல் அலுவலர் முகமது ரிஸ்வான், தலைமை எழுத்தர் முகமது ஈசாக் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக அவர் போளூர் தாலுகா அலுவலகத்திலும், குருவிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஏ.கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆரணி

அதைத்தொடர்ந்து அவர் ஆரணி தொகுதி அரியப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சனோடை பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து வெள்ளேரி கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பெண் பிள்ளைகளுக்காக அமைக்கப்பட்டு வரும் கழிவறை பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, ஆரணி தாசில்தார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story