நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம் நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சின்னவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்வதற்காக வயல்களில் உழவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவையில்லாமல் சில பகுதியில் உள்ள வயல்களில் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் தாழ்த்தியதாலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் நடவுப் பணியில் தயக்கம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சாரல் மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.