அரிசி ஆலைகள்-நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
அரிசி ஆலைகள்-நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் இயக்குனர் ரேசன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன அரிசி ஆலைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்பதனை சோதனை நடத்தி கண்டுபிடிக்க குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் திருச்சி மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வழிகாட்டுதலின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம் ஆலோசனையின் பேரில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் போலீசார் நேற்று ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சியில் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ரேசன் அரிசி தரமாக உள்ளதா? வேறு எங்கும் அனுப்பப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஸ்ரீ புரந்தான், காரைக்குறிச்சி ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.