ரேஷன் கடையில் 80 மூடை அரிசி திருட்டு
ரேஷன் கடையில் 80 மூடை அரிசி திருட்டு போனது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ளது ஆக்கவயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ராஜாத்தி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். இதற்கிடையே மர்ம நபர்கள் ரேஷன்கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடைக்குள் இருந்த 80 மூடை அரிசி மற்றும் சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையை திறக்க வந்த ராஜாத்தி பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு ரேஷன் அரிசி மற்றும் சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து சாலைக் கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி 74 மூடை, பச்சரிசி 6 மூடை, சீனி 5 மூடை, 32 கிலோ பருப்பு 5 மூடை, 12 கிலோ கோதுமை 2 மூடை, பாமாயில் 219 பாக்கெட்டுகள் திருடப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் கடையில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.