ஓசூர் வனக்கோட்ட மலை கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் பதுக்கல்?-மோப்ப நாய் மூலம் சோதனை நடத்த வனத்துறை முடிவு
ஓசூர் வனக்கோட்ட மலை கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
இது தொடர்பாக ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளத்துப்பாக்கிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டத்தில் சந்தனம், தேக்கு, ஈட்டி உள்பட பல்வேறு மர வகைகள் உள்ளன. அதே போல யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், மயில்கள் மற்றும் இதர பறவை இனங்கள், அரிய வகை வன விலங்குகள் உள்ளன.
இங்குள்ள வன உயிரினங்களையும், யானைகளையும் கள்ள நாட்டு துப்பாக்கி மூலம் வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் விவசாய பயிர்களை உண்ண வரும் யானைகளை கள்ள நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு, யானைகள் உயிர் இழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 10 கள்ள நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19-ந் தேதிக்குள் ஒப்படைக்க கெடு
கடந்த 2020-ல் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க மலை கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உரிமல் இல்லாத 38 நாட்டு துப்பாக்கிகளை பொதுமக்கள் தாங்களாக ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் காவல் துறை மூலமும் அதிகமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தால் அவற்றை வருகிற 9-ந் தேதி முதல் 19-ந் தேதிக்குள் வனத்துறையிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாட்டோம்.
மோப்பநாய் மூலம் சோதனை
அவ்வாறு யாரும் ஒப்படைக்காமல் இருந்தால் 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்ட அதிக மோப்ப சக்தி திறன் கொண்ட நாய்கள் மூலம் மலை கிராமங்களில் சோதனை நடத்தப்படும். இதில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம், ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.