அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
பழனி பகுதியில், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பழனியில் இருந்து திண்டுக்கல், உடுமலை, தாராபுரம், கொழுமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த சாலைகள் வழியாக மோட்டார் சைக்கிள், கார், லாரி என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க சாலை விதிகள், போக்குவரத்து குறியீடுகள் குறித்த அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. எனினும் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்கின்றனர். அப்போது பொதுமக்கள் பயன்பாடுடைய வாகனங்களுக்கான அனுமதி, அதிக பாரம் ஏற்றி வரப்படுகிறதா? என சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில் பழனி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், அதிவேகத்தில் செல்லுதல், பொதுமக்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக டிராக்டர், லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.
கொடைக்கானல் சாலை பகுதியில் மண் ஏற்றி வரும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே சாலை விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.