சாலையில் கிடக்கும் பாறைகளால் விபத்து அபாயம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அப்போது மழை தீவிரம் அடைந்தால், ஆங்காங்கே சாலைகளில் மண் சரிவு, மரங்கள் விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. நீலகிரியில் நடப்பாண்டில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அகற்றப்பட்டது. மேலும் சில இடங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. இதற்கிடையே பணிகள் நிறைவடைந்தும் சாலையோரத்தில் மண் அகற்றப்பட்ட இடங்களில் அந்தரத்தில் பாறைகள் தொங்கி வருகின்றன.
விபத்து அபாயம்
இதனால் பாறைகள் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். தொங்கும் பாறைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், டபுள் ரோடு இடையே ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன.
இந்த பாறைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் கீழ்நோக்கி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகளை உடனடியாக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.