பெரியாறு பாசன விவசாயத்துக்கு கான்கிரீட் வாய்க்கால் மேடும், பள்ளமுமாக அமைப்பதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் - தடையின்றி தண்ணீர் செல்ல விவசாயிகள் கோரிக்கை


பெரியாறு பாசன விவசாயத்துக்கு கான்கிரீட் வாய்க்கால் மேடும், பள்ளமுமாக அமைப்பதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் - தடையின்றி தண்ணீர் செல்ல விவசாயிகள் கோரிக்கை
x

பெரியாறு பாசன கால்வாயில் தடையின்றி தண்ணீர் செல்ல கான்கிரீட் வாய்க்கால் மேடும், பள்ளமுமாக அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று பூதகுடி ஊராட்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை


பெரியாறு பாசன கால்வாயில் தடையின்றி தண்ணீர் செல்ல கான்கிரீட் வாய்க்கால் மேடும், பள்ளமுமாக அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று பூதகுடி ஊராட்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கால்வாய் சீரமைப்பு பணிகள்

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதகுடி கிராம எல்லையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை வைத்து இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பெரியாறு பாசன கால்வாய் தண்டலை பிரிவு கால்வாயில் பழைய ஆனையூர் தலைப்பு பிரிவு பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வாய்க்கால்களாக மாற்றப்பட்டு, சீரமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடக்கின்றன.

ஆனையூர் தலைப்பு பிரிவில் வலதுபுறம் ஒரு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பூ.லெட்சுமிபுரம் கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களுக்கான பாசன நீரை கடத்துகிறது. தற்போது அதையும், இடித்துவிட்டு, கான்கிரீட் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

மேடும் பள்ளமும்

இந்த வாய்க்காலில் முதல் கட்டமாக சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு தரைதளத்தில் கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இந்த கான்கிரீட் தொடக்கப்பகுதியில் பள்ளமாகவும், பிறகு மேடாகவும் அமைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பூதகுடி, பூ.லெட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மேலும் கூறியதாவது:-

பழைய ஆனையூர் தலைப்பு கால்வாய் தொடங்கும் இடத்தில் வலதுபுற வாய்க்கால் தரைதள கான்கிரீட் முறையாக அமைக்கப்படவில்லை. அதாவது, வாய்க்காலின் தொடக்கத்தில் பள்ளமாகவும், பின்னர் மேடாகவும் கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இந்த பணிகளின்போது, தண்ணீர் மட்டம் (அதாவது லெவல்) பார்க்காமலேயே மேடாக தரை கான்கிரீட் போடப்பட்டு உள்ளது.

இதனால் பாசன நீர், விவசாய நிலங்களுக்கு கண்டிப்பாக தடையின்றி செல்லாது. இந்த வாய்க்காலை விதிகளுக்கு முரணாக அமைக்கின்றனர். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம்.

கலெக்டரிடம் மனு

உடனடியாக இந்த தரை கான்கிரீட்டை பெயர்த்து எடுத்து, தண்ணீர் மட்டம் (லெவல்) சரிபார்த்து, தடையின்றி தண்ணீர் ஓடும் அளவுக்கு சரியாக வாய்க்காலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டோம். எங்கள் கோரிக்கையை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் செவிகொடுத்து கேட்க மறுக்கின்றனர். இதனால் இதுபற்றி மதுரை மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்து உள்ளோம்.

அந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள், இந்த வாய்க்கால் பணிகளை தொடக்கத்திலேயே சரி செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story