அங்கன்வாடி மையம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்


அங்கன்வாடி மையம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
x

அம்மாபாளையத்தில் அங்கன்வாடி மையம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

அங்கன்வாடி

பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மாபாளையம் கிராம ஊராட்சி 6-வது வார்டு ஏழு தென்னை மரத் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்துக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகை தருகின்றனர். ஆனால் அந்த அங்கன்வாடி மையத்தின் பின்புறம் தான் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் அங்குதான் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகள் கொட்ட வேறு இடம் இருந்தும், இங்கு தான் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்

இந்த குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சில சமயங்களில் குப்பைகள் தீயீட்டு கொளுத்தப்படுகிறது. மேலும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் அந்த வழியாக தான் காலனி தெருவுக்கும், மயான பகுதிக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story