தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 5 April 2023 2:15 AM IST (Updated: 5 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்ததால் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தேனி

வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்ததால் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நீர்வரத்து குறைந்தது

ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகம், நகராட்சி பகுதிகள் மற்றும் வள்ளல்நதி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோடைகாலத்தையொட்டி நீர்வரத்து இன்றி வைகை ஆறு வற்றி வருகிறது. தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே ஆற்றில் ஓடுகிறது. முல்லைப்பெரியாறு அணையிலும் போதிய அளவு நீர்இருப்பு இல்லாத காரணத்தால் மிகவும் குறைந்த அளவு தண்ணீரே குடிநீர் தேவைக்காக திறக்கப்படுகிறது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கு முழுமையாக வந்து சேர்வதில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக வைகை அணைக்கு குறைந்த அளவு தண்ணீரே வருகிறது. வைகை ஆற்றின் ஓரம் விவசாயத்திற்காக மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் குன்னூர் வைகை ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் வைகை ஆற்றில் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் சூழல் உள்ளது.

நீர்வரத்து குறைந்ததால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஆண்டிப்பட்டி, தேனி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story