கழிவுநீர் ஓடையாக மாறிய வடவாறு
தஞ்சையில் கழிவூநீர் ஓடையாக மாறிய வடவாற்றினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் கழிவூநீர் ஓடையாக மாறிய வடவாற்றினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்கள்
தஞ்சை மாவட்டம் முழுவதும் காவிரியின் கிளை ஆறுகள் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் பாசனம் கிடைக்கிறது. காவிரி ஆற்றின் கிளை ஆறுகள் மற்றும் அதில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன.
விவசாயத்துக்கு உதவும் ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திலேயே ஆறு, வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் ஓட்டத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வடவாறு
இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் பகுதி கும்பகோணத்தான் தெரு பகுதியில் செல்லும் வடவாறு, கழிவுநீர் ஓடையாக மாறி வருவது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வடிவாற்று நீரால் அந்த பகுதி மக்களும், விவசாயிக்ளும் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது.
அவற்றில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும், வடவாற்றின் கரைகளிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் விஷப்பூச்சி நடமாட்டும் அதிகரித்து உள்ளது.
கழிவுநீர்
மேலும், தேங்கி கிடக்கும் நீருக்குள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஒரு சிலர் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி வடவாற்றுக்குள் தூக்கி போட்டுச்செல்கின்றனர். வடவாற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
படித்துறை சேதம்
அதுமட்டுமின்றி வடவாற்றின் கரையில் உள்ள படித்துறையும் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. படித்துறையில் உள்ள கைப்பிடி சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் படித்துறை உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் படித்துறையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வடவாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகள், குப்பைகளை அகற்ற வேண்டும். தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெறியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்து காணப்படும் படித்துறையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.