தண்ணீருக்காக காத்திருக்கும் மூணாறு தலைப்பு அணை
மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீருக்காக மூணாறு தலைப்பு அணை காத்திருக்கிறது.
நீடாமங்கலம்;
மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீருக்காக மூணாறு தலைப்பு அணை காத்திருக்கிறது.
மேட்டூர் அணை திறப்பு
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் கர்நாடகா அணைகள் நிரம்பியதால் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்து வைத்தார். விவசாயிகள் மகிழ்ச்சியோடு குறுவை சாகுபடி பணியை கடந்த ஆண்டு தொடங்கினர்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக தொடங்காத நிலையில் டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.
18-ந் தேதி
இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்த பின் கல்லணையில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பாசனத்துக்கு இன்று(வெள்ளிக்கிழமை) திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து பிரியும் பெரிய வெண்ணாற்றில் வருகிற 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பு அணைக்கு (கோரையாறு தலைப்பு) வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3 ஆறுகளில்...
மூணாறு தலைப்பு அணைக்கு வரும் தண்ணீர் பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என 3 ஆறுகளில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்துக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.இதனால் பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கரும், கோரையாற்றில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரும், வெண்ணாற்றில் 94 ஆயிரத்து 219 ஏக்கரிலும் விவசாயிகள் விவசாயம் செய்து பயனடைய உள்ளனர்.