கவர்னர் பதவி வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் - ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கவர்னர் பதவி வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்று ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்ன ஆர்.என். ரவி அவர்களின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் கவர்னர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துவதாக பின்வரும் நிகழ்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்:-
தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது என்றும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது என்றும், இது மாநிலத்தின் நிருவாகத்தில் தலையிடுவதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது என்றும், இது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது என்றும், சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்டமுன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது என்றும் இது சட்டமுன்வடிவின் அவசியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டமன்றத்தின் முழு உரிமைக்கு உட்பட்டது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் அவர்கள் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்றும், சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அவர்கள் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்:-
ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சி.பி.ஐ. கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் அவர்கள் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஊழல் வழக்குகள் தொடர்பான பின்வரும் கோப்புகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்:-
திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது என்றும், ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கம் போன்றது என்றும், மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், கெடுவாய்ப்பாக, ஆர்.என். ரவி அவர்கள், இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.என்.ரவி அவர்கள், விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொதுவெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், 9-11-2022 அன்று ஆர்.என். ரவி அவர்கள், "உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது" என்று ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ளதையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதை மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும், இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
13.06.2022 அன்று ஆர்.என்.ரவி அவர்கள், சனாதன தர்மத்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான 'திருக்குறளை' வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும், இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள், பேச்சுக்களின் மூலமாக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், தமிழ் மக்களின் உணர்வையும், பெருமையையும் புண்படுத்தியுள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய திரு. ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டதாகவும், அவர் மக்களின் தலைவர் அல்ல: நியமனம் செய்யப்பட்ட ஒரு நிருவாகி என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 5-1-2023 அன்று நடைபெற்ற காசி தமிழ் இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில், நாங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது -
• "அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை உணரவில்லை". அவர்கள்
• "மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிருவாக நோக்கங்களுக்காக உள்ளது, எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது; கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்"
• "இங்கே தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது; நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழ்நாடு மட்டும், இல்லை, நாங்கள் உடன்படவில்லை' என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது. கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது".
• "மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை.
திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது என்றும், வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது என்றும், அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு 38,837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28,479 தொழிற்சாலைகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, 2020-2021-ஆம் ஆண்டில், ரூ.13,641 கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து. 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.44,044 கோடியாக உயர்ந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில்தான் குறைபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் என்ற அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு நபரின் பொருத்தமற்ற அரசியல் போக்கையே இது அம்பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சித் தத்துவம், நிருவாக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் விமர்சித்து, அவதூறாகப் பேசியிருப்பதுதான் அதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், கூட்டாட்சி என்பது நிர்வாக நோக்கங்களுக்காக உருவாக்கப்படவில்லை; மாறாக அரசியலமைப்பின்கீழ் இந்தியா இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1-இல் இந்தியாவை "மாநிலங்களின் ஒன்றியம்" என்று வரையறுக்கிறது; இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தை உருவாக்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், "இலக்கியம் மக்களுக்கு மோசமாக போதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்து தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும், இதுபோன்ற அவரது அறிக்கைகள் அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், அவரது இதுபோன்ற செயல்கள், இந்திய அரசமைப்பின் 156 (1)-ஆவது பிரிவின்கீழ், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளதையே காட்டுகிறது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறியவற்றைத் தவிர, ஆர்.என். ரவி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் "தமிழ்நாடு" என்ற பெயரை. "தமிழகம்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள.
முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களின் இந்தச் செயல் தமிழ்நாட்டின்மீது அவருக்குள்ள அதீத வெறுப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளதோடு, திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணா அவர்களால் 'தமிழ்நாடு' எனச் சூட்டப்பட்ட பெயரைக் களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளதோடு, ஆர்.என். ரவி அவர்கள், தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், அவர் அறிந்த வகையில், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்கமுடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் மேலே விவரிக்கப்பட்ட சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என்பதையே காட்டுகிறது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
9-1-2023 அன்று. நிகழ்த்தியபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். உரை ரவி அவர்களின் எதேச்சாதிகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், பிரிவு 163(1)-இன்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாகவோ, தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவோ செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 9-1-2023 அன்று, ஆர்.என்.ரவி அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023 அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப் பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்ததாகவும், அவருடைய அன்றைய உரையில் அவருடைய அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், வரைவு உரையில் குறிப்பிடப்பட்டிருந்த 'சமூகநீதி', 'சுயமரியாதை', 'அனைவருக்குமான வளர்ச்சி', 'சமத்துவம்', 'பெண்ணுரிமை', 'மதநல்லிணக்கம்', 'மனிதநேயம்' மற்றும் 'திராவிட மாடல் ஆட்சி' போன்ற சொற்களை அவர் வாசிக்காமல் புறக்கணித்தார் என்றும், ஒருவேளை இவற்றில் எல்லாம் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் அவற்றைப் புறக்கணித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, 'தந்தை பெரியார்', 'அம்பேத்கர்', 'பெருந்தலைவர் காமராஜர்', 'பேரறிஞர் அண்ணா', 'முத்தமிழறிஞர் கலைஞர்' போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதையும் ஆளுநர் அவர்கள் தவிர்த்தார் எனத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதாகவும், இந்தியாவின் இத்தகைய மகத்தான தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வரைவு உரைக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்த நிலையில்கூட, இதுபோன்ற வாக்கியங்களைப் படிக்காமல் தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பொதுவெளியில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு தான் மாநிலத்திற்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திரு.ஆர்.என்.ரவி அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான ஆளுநராகச் செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெளிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்:-
இவை தவிர, கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சார்ந்த இரண்டு தீட்சிதர்கள், குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன என்றும், இது தொடர்பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மே 4-ஆம் தேதி, ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்மீது மாநில அரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநரின் இத்தகைய அறிக்கை, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்ததாகவும் இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், சிறுமிகளின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தனது பேட்டியில் கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்பது தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தீட்சிதர்களின் மகள்களான 6 மற்றும் 7- ஆம் வகுப்பு மாணவிகளை வலுக்கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அரசு மருத்துவர்கள், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதன் காரணமாக சில பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தனது பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார் என்றும், ஆளுநரின் இந்தக் கருத்துக்கள் தவறானவை என்று பின்னர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கருத்துக்களை குற்றவியல் விசாரணைக்கு இடையூறாகவும், சாட்சியங்களைச் சிதைக்கும் வகையிலும் ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள் என்றும், குழந்தைத் திருமணம் என்ற கொடிய குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கருத்துத் தெரிவிப்பதை நல்ல மனசாட்சி உள்ள யாராலும் அனுமதிக்கமுடியாது என்றும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கடுமையான அரசியலமைப்பு மீறல்:-
15-6-2023 அன்று, தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான திரு. வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை தனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பியதாகவும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதத்தை 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பியதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
16.6.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தனக்குக் கடிதம் எழுதியதாகவும், அதில் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்ற தனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களிடமிருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், திரு. செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பியதாகவும், அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, 31-5-2023 அன்று முன்னதாக வி.செந்தில்பாலாஜி மீதான "கிரிமினல் நடவடிக்கைகள்" அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் அவர்கள் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை தான் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைத் தான் குறிப்பிட்டதாகவும், லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7. உட்பிரிவு 653 என்ற வழக்கில், மாண்பமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டியதாகவும், ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்றும் தான் ஆளுநருக்குக் கடிதம் மூலம் தெரிவித்ததாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் அவர்கள் ஒரு கடிதத்தை தனக்கு அனுப்பியதாகவும், அதில் அதில் இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆளுநரின் அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக தான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதத்தை "நிறுத்திவைக்கும்" மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து தனக்குக் கிடைத்தாகவும், அந்த இரண்டாவது கடிதத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு மாண்புமிகு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தெரிவித்ததாகவும் அக்கடிதத்தில் இப்பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அனைத்து முன்னணி நாளிதழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் திரு. ஆர்.என். ரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும், தான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில், சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் மற்றும் நீக்குகிறார் என்றும், அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதையும் மீண்டும் தான் வலியுறுத்தியதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொள்வார் என தான் நம்புவதாகவும், ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவ வேண்டும் என்றும், அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்றும், அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி, அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும் என்றும், ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது என்றும், அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், மறுபுறம் தனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், அவரை "டிஸ்மிஸ்" செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், திரு. ஆர்.என். ரவி அவர்கள், தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார் என்றும், அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் என்றும் அழுத்தந்திருத்தமாக தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)-இல், மாண்புமிகு குடியரசுத் தலைவர் விரும்பும் காலம்வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்று இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் இந்தியக் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி அவர்கள் நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.