சாலைைய சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அவினாசி அருகே சாலைைய சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவினாசி அருகே சாலைைய சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பெரிய கருணை பாளையத்திலிருந்து கவுண்டம்பாளையம் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் அவினாசி-மங்கலம் சாலையில் அமர்ந்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் தொழிற் சாலைகள் உள்ளது. இங்கிருந்து அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். ரோடு மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவருகிறது. பலகாலமாக இதே நிலையில் உள்ளது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனால் பல முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் பல முறை பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று சாலைமறியலில் ஈடுபட்டோம் என்றனர்.
தகவலறிந்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைப்பதாக உறுதி கூறியபின் சாலைமறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.