பழுதடைந்த கான்கிரீட் சாலைகளை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த கான்கிரீட் சாலைகளை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி 8-வது வார்டு பகுதியில் நீண்ட காலமாக பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் மைய பகுதியில் 8-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் பழைய ரெயில்வே லைன், அம்பேத்கர் தெரு, தங்கவேல் தெரு, முனுசாமி தெரு, சிவாஜி ரோடு, தங்கம் ரோடு, எம்.ராஜூ ரோடு, டி.ஏ.எம்.எஸ். காலனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளன.

மொத்தம் 2 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். நகரின் மையப்பகுதியில் இருந்த போதும் இந்த வார்டில் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

இந்த வார்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 5 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் குறுகலானவை. இந்த சாலைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டதால் வார்டில் தெருக்களில் அமைந்துள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் குறுகி சிறியதாக மாறிவிட்டன. இதன் காரணமாக கழிவுநீர் சீராக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கும் பிரச்சினை உள்ளது. இங்கு நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பகுதி மக்கள் ஆதிதிராவிடர் நல சங்கம் மூலம் இந்த பள்ளி வளாகத்திற்கு கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

இங்கு குளிர்சாதன வசதியுடன் வகுப்பறைகள் செயல்படுகின்றன. ஆனால் மின் இணைப்பிற்கு தடையில்லா சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் தற்காலிக மின் இணைப்பு மூலம் செயல்படும் நிலை உள்ளது. இந்த வார்டில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். நீண்ட காலமாக பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக வார்டு பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தேங்கும் கழிவுநீர்

தங்கவேல் தெருவை சேர்ந்த தொழிலாளி கணேசன்:-

8-வது வார்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள தர்மபுரி-பென்னாகரம் சாலை உயர்த்தப்பட்டதால் மழை பெய்யும் போது மழைநீருடன் கழிவுநீர் அதிக அளவில் இந்த வார்டு பகுதியில் நுழைந்து விடுகிறது. இந்த வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சிறியதாக உள்ளன. இதனால் கழிவுநீர் சீராக வெளியேறாமல் தேங்கும் பிரச்சினை தொடர்கிறது. இதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து கழிவுநீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வார்டில் பாதாள சாக்கடை இணைப்புகளில் சில இடங்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களை சீரமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மின் இணைப்பு

தங்கம் ரோட்டை சேர்ந்த அதியமான்:-

இந்த வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த பகுதி மக்களின் நிதி உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு நிரந்தர மின் இணைப்பு பெறுவதற்கு நகராட்சியின் தடையில்லா சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை. எனவே தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக ஒரு நீர்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.

பழுதடைந்த சாலைகள்

குடும்பத்தலைவி தென்றல் பாண்டியன்:-

இந்த வார்டில் உள்ள பெரும்பாலான கான்கிரீட் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக அம்பேத்கர் சாலை பழுதடைந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வார்டில் சில பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வசதி முறையாக ஏற்படுத்தப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிக போக்குவரத்து கொண்ட இந்த வார்டில் வசிப்பவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு படிப்பகம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரன்:-

8-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வார்டில் டி.ஏ.எம்.எஸ். காலனி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழை நீரோடு கழிவுநீரும் இந்த பகுதியில் புகுந்து தேங்குவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க தீர்வு காணப்படும். இங்கு கூடுதல் கட்டிடங்களுடன் செயல்படும் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நிரந்தர மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும். வார்டில் பாதாள சாக்கடை இணைப்புகளை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்ற வார்டு மக்களின் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். வார்டில் சேரும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. வார்டின் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

* மழைக்காலங்களில் தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு.

* குடிநீர் பிரச்சினையை தடுக்க கூடுதல் நீர்த்தேக்க தொட்டி.

* கான்கிரீட் சாலைகள் சீரமைப்பு.

* கழிவு நீர் கால்வாய்கள் சீரமைப்பு.


Next Story